அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு ; பிடிபட்ட இளைஞன்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை செய்த போது 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (02) சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெறுகிறதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த ஒரு தொகை போதைப் பொருள் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப் பொருள்
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், மோட்டார் சைக்கிள், கைப்பேசி (மொபைல் போன்), இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது,அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், பொலிஸ் குழுவினரால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.