நித்திரைப் பிரியரா நீங்கள் ? 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா!
தினசரி நாளொன்றுக்கு 8 மணி நேரங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் பகீர் தகவலொன்று வெளிவந்துள்ளது.
ஒருவருக்கு தினசரி 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் போதுமானது என்று பல ஆண்டுகளாக நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும் ஒரு சிலர் வார இறுதி நாட்களில் சோர்வின் காரணமாக நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

ஆனாலும் ஒரு சிலர் இரவில் 9 - 10 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்கள் தூங்குவது அல்லது நீண்ட மதிய நேர தூக்க பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதடையே தினசரி அதிகமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அபாய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
தினசரி 6 - 8 மணி நேரங்கள் வரை தூங்குபவர்களை ஒப்பிடும் போது, நாளொன்றுக்கு 8 மணி நேரங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சில ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதோடு இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உட்கார்ந்தே பல மணிநேரங்கள் வேலைபார்க்கும் தற்கால வாழ்க்கை முறை காரணமாக 30 வயதிற்குள் மாரடைப்பு மற்றும் இதனால் இறப்பு உள்ளிட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உலகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்து வருகின்றன.

இது போன்ற வாழ்க்கைமுறைகளும் பக்கவாதம் ஏற்பட காரணமாக அமைவதாக சொல்லப்படுகிறது. சீனாவின் ஹுவாஜோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் சியோமின் ஜாங் பங்கேற்ற ஆய்வு ஒன்றில், பங்கேற்பாளர்களின் தூக்க முறைக்கும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கும் இருக்கும் தொடர்பு பற்றி மதிப்பீடு செய்யப்பட்டது.
இதில் இரவுக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களை விட, 9 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 23% அதிகம் உள்ளமை கண்டறியப்பட்டது.

அது தவிர நீண்ட நேரம் தூங்கினாலும் கூட நல்ல நிம்மதியான உறக்கம் இல்லை என்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82% அதிகம் என்பதும் தெரிய வந்தது.
பகல் அல்லது மதிய நேரங்களில் குறைந்தபட்சம் 90 நிமிடங்களுக்குமிகாமல் தூங்கும் வழக்கமுடியவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25% அதிகம் என்பதும் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் முதியவர்கள், இரவு மற்றும் மதிய தூக்கத்திற்கு செலவிடும் நேரம், தூக்கத்தின் தரம் உள்ளிட்டவற்றுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் தூக்கம் மற்றும் தூக்கத்தின் சரியான காலம் மற்றும் நல்ல நிம்மதியான தூக்கத்தின் தரத்தை பராமரிப்பது உள்ளிட்டவை பக்கவாதத்தை தடுப்பதற்கான பிற நடத்தைத் தலையீடுகளை (behavioral interventions) பூர்த்தி செய்ய கூடும் என சியோமின் ஜாங் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனை நரம்பியல் இயக்குநர் டாக்டர் ஜெய்தீப் பன்சால் கூறுகையில்,
அதிக தூக்கம் பக்கவாதத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும் அளவுக்கு அதிகமாம் தூக்கத்தால் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உடல் எடை இரண்டுமே கணிசமாக உயரும் அபாயம் அதிகம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே இவை இரண்டுமே பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளாக இருக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.