யோஷித ராஜபக்ஷ - வசந்த கரன்னாகொட வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராந வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, இந்த மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் உள்ள இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தார்.
2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியில் பங்கேற்கச் செய்வதற்கு முறையற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ஷ மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது