யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை ; வெளிநாடு செல்ல தடை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷித்த ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து யோஷித்த ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு செல்வதற்கு தடை
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி, சந்தேக நபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும், சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, சந்தேக நபரை மேலும் காவலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        