யால தேசிய பூங்காவில் அறிமுகமாகும் புதிய திட்டம் ; சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையின் தேசிய பூங்காக்களில் நிலவும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும் 'சுமந்து செல்லும் திறன்' வரம்புகள் மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் டிக்கெட் முறையை நடைமுறைப்படுத்த சுற்றுலாத்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
யால தேசிய பூங்காவில் நெரிசல் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவவசம் தெரிவித்தார்.

வருகையாளர் எண்ணிக்கை
தற்போது இலங்கையின் வனவிலங்கு பூங்காக்களில் வருகையாளர்களின் எண்ணிக்கைக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன், கியூ.ஆர். குறியீடு ஸ்கேனிங் வசதியுடன் கூடிய 'ஈ-டிக்கெட்' முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முறையின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை வாகனங்கள் மட்டுமே நுழையலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட வேண்டிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை முன்கூட்டியே தீர்மானிக்கப்படும். யால பூங்காவில் தற்போதுள்ள ஊழியர் பற்றாக்குறையினால் சில நுழைவு வாயில்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஊழியர் எண்ணிக்கையை அதிகரித்து, கூடுதல் வாயில்களைத் திறப்பதன் மூலம் வாகன நெரிசலைத் தவிர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மற்ற அனைத்துப் பூங்காக்களும் ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பயணிகளை அனுமதிக்கலாம் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. அதே முறையை இங்கும் அமுல்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே தயாராக உள்ளன என்று புத்திக ஹேவவசம் தெரிவித்தார்.