போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பலகோடி ரூபா சொத்து விபரங்கள்
மொனராகலை தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரால் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்துச் சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
காவல்துறை போதைப்பொருள் பணியகம், பணச் சலவை (தடுப்பு) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான பல குற்றப் பதிவுகளைக் கொண்டவர் என்றும், நாட்டின் பல காவல் நிலையங்களால் பலமுறை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, சந்தேகநபரின் மனைவியின் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், எம்பிலிபிட்டிய மற்றும் தங்காலை மேல் நீதிமன்றங்கள் ஏற்கனவே பிறப்பித்திருந்த சொத்து முடக்க உத்தரவுகளை நேற்று(11) முதல் மேலும் ஏழு நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளன.
முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விபரம்,
எம்பிலிபிட்டியவில் ரூபா 30 மில்லியன் மதிப்பில் உள்ள ஒரு மருந்தகம்
எம்பிலிபிட்டியவில் ரூபா 70 மில்லியன் மதிப்புள்ள 39.5 பேர்ச்சஸ் காணி மற்றும் ஒரு விருந்தகம்
மித்தெனியவில் ரூபா 15 மில்லியன் மதிப்பில் உள்ள ஒரு காணி மற்றும் இரண்டு கடைகள்
மித்தெனியவில் ரூபா 7.5 மில்லியன் மதிப்பில் உள்ள ஒரு காணி மற்றும் கடை
மித்தெனியவில் ரூபா 7.5 மில்லியன் மதிப்பில் உள்ள மற்றொரு காணி மற்றும் கடை
எம்பிலிப்பிட்டிய, கீரவலகட்டுவவில் ரூபா 35 மில்லியன் மதிப்புள்ள 25 பேர்ச்சஸ் காணி மற்றும் இரு மாடி வீடு
மித்தெனிய, பனமுர வீதியில் ரூபா 15 மில்லியன் மதிப்பில் உள்ள இரு-மாடி வணிகக் கட்டிடம் இவ்வாறு சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை அரசுக்கு உரிமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ், சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, சட்டவிரோத வழிகளில் பெறப்பட்டதாக நம்பப்படும் அனைத்துச் சொத்துக்கள் குறித்தும் தனது விசாரணைகளைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.