விநாயகரின் முழுமையான அருள் கிடைக்க வேண்டுமா? விநாயகர் சதுர்த்தி அன்று இப்படி வழிபடுங்க
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமான் அவதாரம் செய்த திருநாளாகும். பொதுவாக விநாயகரை எப்படி வழிபட்டால் அதை அவர் ஏற்றுக் கொள்வார் என தெரியுமா?
விநாயகரை வழிபடுவதற்குரிய விதிகளை பின்பற்றி, முறையாக வழிபட்டால் விநாயகரின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். விநாயகரை சரியான முறையில் வழிபடாததன் காரணமாகவே பலருக்கும் விநாயகரை வழிபட்ட பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடுகிறது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்றால், முதல் நாளை வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்து விடுவோம். விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினமோ அல்லது அன்றைக்கு காலையிலோ புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அதற்கு பூ போட்டு, நைவேத்தியம் படைத்து வழிபடுவோம்.
ஆனால் இந்த வழிபாட்டில் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கவனித்து செய்ய வேண்டும்.
[VVB0QR ]
விநாயகர் சதுர்த்தி அன்று கண்டிப்பாக களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை மட்டுமே வாங்கி வந்து வழிபட வேண்டும். காரணம் களி மண் என்பது பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியதாகும்.
அதோடு களி மண் பிள்ளையார் எளிதில் நீரில் கரையக் கூடியதாகும். விநாயகப் பெருமான் துன்பங்களை போக்குபவர் என்பதால், விநாயகர் சிலையை கரைப்பதால் நம்முடைய துன்பங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் மண்ணிற்கு சக்தி அதிகம்.
அதே போல் விநாயகர் சிலைக்கு சந்தனம், குங்குமம் வைத்து, வயிற்றுப் பகுதியில் காசு வைக்க வேண்டும். பூ, அருகம்புல் மாலை அணிவித்து பலகையில் வைக்க வேண்டும். குன்றிமணியால் விநாயகர் சிலைக்கு கண்களை திறக்க வேண்டும்.
எந்த ஒரு சிலையாக இருந்தாலும் கண்திறக்கும் நிகழ்வை செய்வார்கள். அப்படி கண் திறந்தால் மட்டுமே அந்த சிலையில் உயிர்ப்பு தன்மை என்பது வரும். அப்படி வந்தால் மட்டுமே நாம் மந்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வழிபடும் போது விநாயகர் அந்த சிலையில் எழுந்தருளி நமக்கு அருளை வழங்குவார்.
விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், வடை என நைவேத்திய பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், இலைகள் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுவது சிறப்பு. விநாயகருக்கு அனுசுயா, அரிசி மாவில் வெல்லம் வைத்து 21 மோதகம் உணவாக படைத்தார்.
அதை சாப்பிட்டதும் விநாயகரின் பசி அடங்கியதுடன், அவரது மனமும் மகிழ்ந்தது. இதனால் எவர் ஒருவர் விநாயகருக்கு அனுசுயாவை போல் மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும் என பார்வதி தேவியே கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.
அனுசுயா படைத்தது போல் நாமும் 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுவது விநாயகரின் அருளை முழுமையாக பெற முடியும்.
விநாயகர் சிலையை மறுநாளே எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதை விட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வைத்து, தொடர்ந்து மூன்று நாட்களும் விநாயகருக்கு ஏதாவது ஒரு படையல் படைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.
அதற்கு பிறகு விநாயகரை மகிழ்ச்சியாக எடுத்துச் சென்று நீரில் கரைத்து, நம்முடைய கஷ்டங்களும் விரைவில் இதே போல் கரைய வேண்டும்.
அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக, கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என விநாயகரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இதனால் விநாயகரின் மனதை மகிழ்விக்க முடியும்.