உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டி; இலங்கைக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கியநிலை
இலங்கையில் அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தயாராகும் இலங்கை அணியினருக்கு உரிய கட்டணத்தைச் செலுத்த முடியாத துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன் வீரர்களின் பயணத்துக்குத் தேவையான பணம் தற்போது இலங்கை மல்யுத்த கூட்டமைப்பின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. எனினும் போட்டியில் கலந்து கொள்வோரின் கணக்கில் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டிருந்த போதிலும் நாட்டிலுள்ள அந்த வங்கிகள் ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை அவற்றை வழங்கக் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளன.
ஏனெனில் நாட்டில் தற்போதுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. இதேவேளை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக 5500 டொலரை உலக சம்மேளனத்திற்குச் செலுத்த வேண்டும், அதன் முழுத் தொகையாக இலங்கை ரூபாவின் படி சுமார் 1.2 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும்.
இலங்கை அணி அந்த நாட்டை அடையும் முன்னர் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தவில்லை என்றால் இலங்கை அணி போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் இலங்கை மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.