இருளில் மூழ்கப்போகும் உலகம் ; இலங்கையருக்கு காத்திருக்கும் பெரும் அதிசயம்
எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது.
இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.
அற்புதமான நிகழ்வு
குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும்.
செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.