வேகமாகப் பரவி வரும் தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை
31 நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொலரா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி முதல் இந்த மாத இறுதிவரை கொலராவால் பாதிக்கப்பட்ட 31 நாடுகளில் 409,000 நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,738 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
முன்னர் கொலரா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத கொங்கோ மற்றும் சாட் போன்ற நாடுகளிலிருந்து தற்போது நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலராவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது
இந்த அதிகரிப்புக்கு மோதல், வறுமை, இடப்பெயர்ச்சி, இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பன காரணமாகின்றன.
விசேடமாக கிராமப்புற மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நோய் அதிகளவில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்துக்கான அணுகலை மேம்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பிரசாரங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளது.