இன்று யாழ்ப்பாணத்தில் உலகக் கிண்ணம் ; நல்லூர் முதல் பொது நூலகம் வரை
ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, இன்று (1)உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த கிண்ண சுற்றுப்பயணத்தில் இலங்கையின் பல இடங்களுக்கும் கிண்ணம் கொண்டு செல்லப்படுகின்றது.

கிண்ணம் தாங்கிய ஊர்தி
உத்தியோகபூர்வ பயணத் திட்டத்தின்படி, இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து புறப்பட்ட கிண்ணம் தாங்கிய ஊர்தி, மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகிய இடங்களுக்குக் கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது.
வடபகுதியின் முக்கிய விளையாட்டு மையமாகத் திகழும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கான விஜயம், அப்பகுதி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரினை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், இலங்கை முழுவதும் கிரிக்கெட் உணர்வை மேம்படுத்தவும் இந்த கிண்ணச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய விஜயம் இரவு யாழ்ப்பாணப் பொது நூலகத்துடன் நிறைவடையும்.