மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் ; கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் கொலை மற்றும் நகைக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 20-ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் அவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லியடி வயல் பிரதேச கிணறு ஒன்றினுள் வீசப்பட்டிருந்தார்.

விளக்கமறியல் உத்தரவு
இதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
இந்தக் கொடூரச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை நடத்தி, பிரதான சந்தேகநபர்கள் மூவர் உட்பட ஐந்து பேரைக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், பிரதான சந்தேகநபர்கள் மூவரையும் 04 நாட்களுக்குப் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 27-ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.