பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி; பொலிஸார் வெளியிட்ட தகவல் !
பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நேற்று முன் தினம்(5) இரவு வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பேத்தியை சுடுவதற்காக வந்த இடத்தில் குறி தவறி மூதாட்டி உயிரிழந்ததாக க் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் புல்மோட்டை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
டுபாயில் மறைந்துள்ள குற்றவாளியின் உதவியாளர்கள்
சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் மறைந்திருந்து இந்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெலிஓய பிரியந்தவின் இரண்டு உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் கிரிஹிப்பன்வெவ, வெலிஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை மூதாட்டி கொலை உட்பட 3 கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கி மற்றும் அதன் மெகசின், 08 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மற்றும் அதன் 04 தோட்டாக்கள், 61 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 105 கிராம் ஹெரோயின் என்பன விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதோடு டுபாயில் தலைமறைவாக உள்ள வெலிஓயா பிரியந்தவின் மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்த ஒருவரைக் கொல்வதற்காகவே மேற்படி கொலைகளில் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் , கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் போகஹவெவ பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கொலையுண்ட பெண்ணின் பேத்தியை சுடுவதற்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.