மட்டக்களப்பு பெண்ணின் நெடுநாள் மோசடி; வீட்டைச் சுற்றிலும் அதிநவீன கண்காணிப்பு கருவிகள்
மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நீண்டகாலமாகப் பெரும் அளவில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைதாகியுள்ளார். 105 போத்தல் கசிப்புடன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் வீடு, மிகவும் உயரமான மதில்களால் சூழப்பட்டிருந்ததுடன், வீட்டைச் சுற்றிலும் அதிநவீன கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

வீட்டைச் சுற்றிலும் அதிநவீன கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள்
பொலிஸார் சுற்றிவளைப்புக்கு வரும்போது, ஒளிப்படக்கருவிகள் ஊடாக அதனை அவதானிக்கும் இப்பெண், வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே யாரும் இல்லாதது போன்ற பாவனையில் நீண்டகாலமாகத் தப்பித்து வந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின் கீழ், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் விசேட குழுவினர் முற்றுகை மேற்கொண்டனர்.
பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையிலான குழுவினர், குறித்த வீட்டைத் தந்திரமான முறையில் சுற்றிவளைத்துச் சோதனையிட்டபோதே, 105 போத்தல் கசிப்புடன் இப்பெண் பிடிபட்டார். பெண்ணின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வந்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள இவ்வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத வியாபாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.