ஆர்ப்பாட்டங்களின் போது பெட்டன் தடிகளுடன் வருபவர்கள் அவன்கார்ட்டால் இயக்கப்படும் குழுவா?
நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் போது, பெட்டன் தடிகளுடன் இராணுவத்தினரைப் போன்று வருபவர்கள் அவன்கார்ட்டால் இயக்கப்படும் குழுவா? என்ற சந்தேகங்கள் நிலவுவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி வயிற்றை வெட்டிக்கொள்ளும் நிலைமை ஏற்படும்
அதன்போது ஜே.வி.பியின் தலைவர் மேலும் கூறுகையில், “தேர்தல் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது பொலிஸார், இராணுவத்தைக் கொண்டு ஒடுக்கின்றனர்.
பெட்டன் தடிகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்துகின்றனர். அண்மையில் ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் போன்று தடிகளை எடுத்து வந்தனர். இராணுவத்துக்கென பெட்டன் தடிகளை வழங்கும் போது அதற்கான முறைகள், நிறங்கள், அளவுகள் உள்ளன.
ஆனால் அன்றைய தினத்தில் அவர்களிடம் இருந்த பெட்டன் தடிகள் அப்படியானவை அல்லஎன கூறிய அநுரகுமார , வரும் போது மரத்தில் வெட்டி வந்தது போன்றுதான் இருந்தது என்றார்.
எனவே இவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவம் போன்றே இருந்தனர் என்றும் பெட்டன் தடிகளுடன், துப்பாக்கிகளை ஏந்தி வந்த இவர்கள் யார் என தெரியாது என இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார்.
அப்படியானால் இவர்கள் யார்? மிலிட்டரி இராணுவத்தைக் கொண்ட அவன்காட்டின் குழுவா இது? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஜனாதிபதி தனியாக வாளை எடுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றார். எங்களை அழைக்கின்றார். நாங்கள் அங்கே போக மாட்டோம். இறுதியில் அவரே வயிற்றை வெட்டிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் என்றும் அநுரகுமார அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.