விமல் வீரவன்ச மன்னிப்பு கேட்க வேண்டும்!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு முன்னர் மக்களை ஏமாற்றியமைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
புதிய கூட்டணிகளை அமைப்பதற்கான அரசியல்வாதிகளின் உரிமையை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் தற்போது இலங்கை வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அந்தக் குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சராக வாய்ப்பில்லை
ராஜபக்ச குடும்பத்திற்கு லீ குவான் யூ, மகாதீர் மொஹமட், மன்னர் துடுகாமுனு மற்றும் அநகாரிக தர்மபால போன்ற குணநலன்கள் இருப்பதாகவும், கடந்த தேர்தலின் போது வாக்காளர்களை ஏமாற்றியதாகவும் அந்த குழுவினர் கூறியதாக பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.
இதற்கிடையில், அவரது அடுத்த நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சில ஊடக அறிக்கைகள் கூறுவது போல், இந்த வாரத்தில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் பாட்டலி சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.