யார் இருந்தாலும் இல்லை என்றாலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பறக்கும்; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அனைத்து விமானிகளும் வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார். "கொவிட் நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டன.
இதனால், பல விமானங்கள் தரையிலேயே இருந்தன. ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம்.
கொவிட் காலத்தில், தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.
விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்,
260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது. அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால், அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர்.
இந்நிலையில் புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள்.
அவர்களும் வெளியேறினால், வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு, விமான சேவை தொடரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.