இலங்கையில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றை செயலிழக்க செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த மின் பிறப்பாக்கியை நாளையதினம் (23-12-2022) முதல் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
நிலக்கரியை முகாமைத்துவம் செய்தல் மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மின்பிறப்பாக்கியை செயலிழக்க செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்படுகின்றமையினால், ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை, மாற்று வழிகளின் ஊடாக பூர்த்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை கூறுகின்றது.
இதன்படி, தற்போது அமுல்படுத்தப்படும் இரண்டு மணித்தியாலங்களும், 20 நிமிடங்களுக்குமான மின்சார தடையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தேசிய மின்சார கட்டமைப்பிற்கு கிடைக்கும் 900 மெகாவார்ட் மின்சாரத்திலிருந்து, நாளைய தினம் முதல் 300 மெகாவார்ட் மின்சாரம் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.