காட்டு யானைகள் சுட்டுக் கொலை ; இலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம்
அண்மைய வாரங்களில் காட்டு யானைகளை சுட்டுக்கு கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்யும் நபர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று (15) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இலங்கையில் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க சட்டத்தை உடனடியாகவும் கடுமையாகவும் அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத மின்சார வேலிகள்
மேலும், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் தனியார் நிலங்களில் சட்டவிரோத மின்சார வேலிகள் அமைப்பதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மனித-யானை மோதலுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறியும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில், அமைச்சும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார வேலிகளை நிறுவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டு வருகின்றன.
இந்த வேலிகள் மனித குடியிருப்புகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.