நெல் தொடர்பில் ’யார் கூறுவது பொய்’? நிதி குழுவின் தலைவர் கேள்வி
நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நெல் உற்பத்தி தொடர்பான தரவுகள் பிழையாக இருந்தால் தீர்மானங்களும் தவறானதாக அமையும் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) அரசாங்க நிதி தொடர்பான குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களத்தின் அதிகாரிகளை அண்மையில் அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு அழைத்தோம்.
2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மற்றும் அரிசியின் மொத்த தொகை மற்றும், 2025 ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி உற்பத்தி தொகை எதிர்பார்ப்பு குறித்து கேள்வியெழுப்பினோம்.
2024 ஆம் ஆண்டு 1 மில்லியன் மெற்றிக்தொன் நெல் இல்லாமல் போயுள்ளது.அதனால் தான் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களம் குறிப்பிட்டதை கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது.
2024 ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் 4.39 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அக்காலப்பகுதியில் 2.9 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக நாங்கள் குறிப்பிட்டோம்.
2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மற்றும் அரிசியின் மொத்த தொகை தொடர்பில் தரவுகளை கோரியுள்ளேன்.
அதிகாரிகள் பொய்யான தரவுகளை குறிப்பிடுகிறார்களா அல்லது வர்த்தகர்கள் பொய் குறிப்பிடுகிறார்களா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
தரவுகள் பொய்யாயின் தீர்மானங்களும் தவறானதாக அமையும். ஆகவே இவ்விடயம் குறித்து ஆராயுமாறு விவசாயத்துறை அமைச்சுக்கு பரிந்துரைக்கின்றோம் என்றார்.