பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு இந்தளவுக்கு அதிகாரம் வழங்கியது யார்?
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு தொழில் சட்டத்தை மீறி, தொழில் அமைச்சிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதன் பின்புலம் என்னவென சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையக மக்களின் வாக்கு அரசாங்கத்திற்கு வேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையை ஏன் கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றீர்கள் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம், வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
காலத்தின் கட்டாயம் மற்றும் மிக முக்கியமான தேவையை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்ட மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்டு, துன்பம் இழைக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு, இந்த நாட்டின் தொழிற் சட்டங்கள் அனைத்தையும் மீறி பெருந்தோட்ட கம்பனிகளினால் நடத்தப்படுகின்றனர்.
பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சிப்பதை தடுக்க உரிய வேலைத்திட்டம் ஒன்றை தொழில் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பெருந்தோட்ட மக்கள் என்றும் இல்லாதவாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் பெருந்தோட்ட கம்பனிகள் முழுமையாக பெருந்தோட்ட தொழிற்சங்க, தொழிலாளர் உரிமைகளை நிறுத்தி அவர்களை வஞ்சித்துக்கொண்டுள்ளனர்.
ஒரு நாடு ஒரே சட்டம் என்றால் மலையக மக்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும். மலையக மக்களுக்கு மாத்திரம் மனித உரிமைகளை மீறி வஞ்சிக்கப்பட்டு, பெண் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக சீரழிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதன் நோக்கம் என்ன.
தொழிற்சட்டத்தை மீறி, தொழில் அமைச்சிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இந்தளவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதன் பின்புலம் என்ன? இந்த கேள்விக்கு பதில் தெரிய வேண்டும்.
மலையகத்தில் முழுமையாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது, வேலை நாட்கள் குறைக்கப்பட்டு வேலைப்பளு அதிகரிக்கப்பட்டு மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தோட்டத்தொழிலாளர்களுக்காக தோழர் சட்டம் எங்கே? இந்த அரசாங்கம் உறங்கிக்கொண்டுள்ளதா? மலையக மக்களை வஞ்சித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து, மலையக மக்களை தூண்டும் விதத்தில் அரசாங்கம் நாடகமாடிக்கொண்டுள்ளது.
இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கமும் என்ன செய்கின்றது. மலையக மக்களின் வாக்கு வேண்டும் என்றால், அவர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என்றால் அவர்களில் வாழ்க்கையை ஏன் கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றீர்கள் என அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.