மருந்துகளின் விலைகளை தீர்மானிப்பது யார் ? இராஜாங்க அமைச்சு அளித்த பதில்
இலங்கையில் மருந்துகளின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களால் மேற்கொள்ள முடியும் என்று வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மருந்துகளின் விலைகளை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய மருந்தாக்கல் அதிகாரசபையின் விலை நிர்ணய குழுவிடமே காணப்படுகிறது.
மேலும் அதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணய குழுவில் வெவ்வேறு துறைகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி மருந்து விலை நிர்ணய குழுவின் தலைவராக சிரேஷ்ட வைத்தியர் பாலித அபேகோனால் , டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மருந்து விற்பனையாளர்களுக்கு அவர்களின் எண்ணத்திற்கமைய விலைகளை தீர்மானிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.