விடுதலைப் புலிகளின் அழிவின் சூத்திரதாரிகள் யார்?
விடுதலைப் புலிகள் தொடர்பில் எவரும் எதையும் கூறலாம் என்னும் காலமிது. சொல்வதைக் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதான் ஏனெனில் பதில் சொல்லுவதற்கு. எவரும் இல்லை.
இறுதிக்கட்ட யுத்தத்தத்தின் போது, பிரபாகரன் என்னுடன் தொடர்பு கொண்டு, எப்படித் தப்பிப் பிழைப்பது என்று கேட்டார், என்று ஒருவர் கூறினால், இல்லை இவர் பொய் பேசுகின்றார், என்று யாரால் கூற முடியும்?
இன்றைய காலத்தில் ஆதாரங்கள்
ஒரு நேர்காணலை கேட்க நேர்ந்த போது இந்த விடயமே மனதில் தோன்றியது. உண்மையில் இப்போது வெளிவருகின்றன நேர்காணல்கள் பலவற்றை நான் கேட்பதில்லை – நன்கு பரிட்சயமான நண்பர்கள் யாராவது அனுப்பினால் மட்டும் கேட்டுப் பார்ப்பதுண்டு. அப்படித்தான் சில தினங்களுக்கு முன்னர் ஒரு நண்பர், நேர்காணல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
ஜெயச்சந்திரன் என்பவருடைய நேர்காணல்தான் அது. நேர்காணலில் ஒரு புதிய கண்டு பிடிப்பு. அதாவது, விடுதலைப் புலிகளை அழித்தது, புலிகளின் மதியுரைஞர் என்றவாறான கதையே அதில் மேலோங்கியிருக்கின்றது.. இறுதியில் பாலசிங்கத்திற்கும் கிடைக்கப் போவது துராகிப் பட்டியல்தான். அப்படியானதொரு பார்வையே வழங்கும் வகையிலேயே அந்த நேர்காணல் அமைந்திருந்தது.
பெரிய வேடிக்கை என்னவென்றால் இராணுவ ஆய்வாளராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த (தராக்கி) சிவராம் விடயங்களை மிகவும் சரியாக சுட்டிக்காட்டியதாகவும் புகழாராம் சூட்டப்படுகின்றது. ஜெயச்சந்திரனின் கதையின் படி, எரிக் சூல்கெய்ம், மிலிந்த மொறகொட ஆகியோரது சதிக்குள் பாலசிங்கம் விழுந்துவிட்டாராம் - இதனை தலைவருக்கு தாங்கள்தான் தெளிவுபடுத்தினார்களாம்.
அடுத்த பெரிய நகைச் சுவை – பாலசிங்கத்தின் சிக்கல்கள் பற்றி, ஜெயசந்திரனுடன், பிரபாகரன் நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றாராம்.
சிவராமை தமிழ் நெற்றிலிருந்து அகற்ற வேண்டும் என்று பாலசிங்கம் முயற்சித்தாராம் அவர் அப்படி முயற்சித்தாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது ஆனால் சிவராம் தொடர்பில் பாலசிங்கம் சந்தேகம் கொண்டிருந்தார் என்று நான் அறிந்திருக்கின்றேன் - அதாவது, சிவராம் தேசியவாதியாடாப்பா அல்லது தேசியவாதி மாதிரி நடிக்கிறானா என்று பாலசிங்கம் கேட்டிருக்கின்றார். சிவராமை தமிழ்நெற்றுக்கு அறிமுகப்படுத்தியவர் நோர்வேயில்தான் இருக்கின்றார். பொட்டு அம்மானுக்கு சிவராம் ஆலோசனை வழங்கியதாகவும் ஜெயசந்திரன் கூறுகின்றார்.
இதனைக் கேட்ட போது முன்னர் படித்த ஒரு செய்தியே நினைவுக்கு வந்தது – அது தமிழக முதலமைச்சர் காமராஜர் பற்றியது. காமராஜர் மரணப்படுக்கையில் இருக்கின்ற போது, கருணாநிதியின் கையை பிடித்து, நீங்கள்தான் உண்மையான ஜனநாயகவாதி என்று குறிப்பிட்டாராம் - இதனைக் கேட்ட ஒருவரோ - தலைவர் காமராஜர் மதியம் உறங்கத்தில் மரணித்தாக அல்லவா நான் அறிந்திருக்கின்றேன் - சரி விடுவோம், காமராஜர் வந்து பதில் சொல்லவா போகின்றார்!
ஜெயசந்திரன் போன்றவர்களின் கதைக்கு பிரபாகரன் மற்றும் பொட்டு வந்து பதில் சொல்லவா போகின்றனர் ஆனால் கிணறு வெட் பூதம் கிளம்பிய கதையாக, இந்த நேர்காணலின் மூலம் ஒரு உண்மை தெளிவாகின்றது. இன்றைய காலத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் எதனையும் பேச முடியாது ஏனெனில் ஆதாரங்கள் ஒரு போதும் கிடைக்காது. ஆனால் தர்க்கரீதியில் விடயங்களை ஆராய்ந்தால் அதுவே ஒரு ஆதாரமாக மாறும்.
அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் (ஜெயச்சந்திரனின் பார்வையில் லிபரல் கெஜிமொனி) தனிநாட்டை கைவிடுமாறு வலியுறுத்தியும் தலைவர் அதனைச் செய்ய மறுத்துவிட்டார் - தாங்களும் சிவராமும் அதனையே வலியுறுத்தினோம் அதாவது, ஏந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறைமையை கைவிடக் கூடாதாம்.இறுதியில் அதுதான் முள்ளிவாய்க்காலில் நடந்ததாம்.
இதனை தர்க்கரீதியில் கட்டவிழ்த்தால், ஒரு இணக்கப்பாட்டுக்குச் சென்று தங்களையும் பாதுகாத்து, உலகத்தின் தீர்மான எல்லைக்குள், தமிழ் மக்களுக்காக உச்சபட்சமாக எதனைப் பெற முடியுமோ, அதனை பெறுவதற்கான வாய்ப்பை புறக்கணிக்குமாறு ஜெயசந்திரனும் சிவராமும் ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். ஆனால் பாலசிங்கமோ உலகைப் புரிந்து கொண்டு பிரபாகரனையும் இயக்கத்தையும் பாதுகாக்க முயற்சித்திருக்கின்றார்.
இதுதான் விடயம் என்றால் உண்மையில் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்கும் பணிக்கு துணை புரிந்தவர்கள் யார்? ஜெயச்சந்திரன் குறித்த நேர்காணலில், நாம் என்றே தன்னை விழிக்கின்றார் - அந்த நாம் என்பவர்கள் யார்? ஏனெனில் எரிக் சூல்கெய்ம் தன்னுடைய நேர்காணல்களில் ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப கூறியிருக்கின்றார் அதாவது, டயஸ்போறா, பிரபாகரனுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கியது. அந்த டயஸ்போறா நாங்கள்தான் என்று ஜெயச்சந்திரன் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார்.