ஐக்கிய அரபு இராச்சியத்தை கோட்டாபய விரும்புவதற்கான காரணம் என்ன?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தனது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது விருப்பமான இடமாகத் தேர்ந்தெடுத்தமை குறித்து சர்வதேச புலனாய்வு செய்தியாளர் கூட்டமைப்பு, அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
அவரின் இந்த விருப்பம், பாரசீக வளைகுடா நிதி மையத்துடன், ராஜபக்ஷர்களுக்கு உள்ள உறவுகளை கோடிட்டுக் காட்டுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியலில் சுமார் 20 வருடங்கள் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷ குடும்பத்தின் தவறான கொள்கை காரணமாக இலங்கை பாரிய பொருளாதார பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக, சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு தலைமையிலான கடல்சார் நிதி தொடர்பான, பண்டோரா ஆவணங்களில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.
ராஜபக்ஷ குடும்பத்தின் நிருபமா ராஜபக்ஷவும் (Nirupama Rajapaksa) அவரது கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் இரகசிய ஷெல் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பயன்படுத்தி 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களையும், லண்டன் மற்றும் சிட்னியில் கலைப்படைப்புகள் மற்றும் சொகுசு சொத்துக்களை வைத்திருந்தனர் என்பதை பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தின.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி நடேசன் தம்பதியரின் இரண்டு பிள்ளைகள் துபாயில் வசிப்பவர்கள் என்பதை ஐக்கிய அரபு இராச்சிய குடியுரிமை அடையாள அட்டை மற்றும் பிற பதிவுகள் என்பன உறுதிப்படுத்தின.
2016 ஆம் ஆண்டு, நடேசன் தனது ஷெல் நிறுவனங்களில் ஒன்றின் வங்கி கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பத்தில் துபாய் முகவரியை தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒக்டோபரில் தம்பதியினரின் கடல்சார் சொத்துக்கள் பற்றிய பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது அரசாங்கம் இது தொடர்பில் விசாரணை நடத்தும் என்று அறிவித்தார்.
இருப்பினும், அது தொடர்பில் உரிய தகவல்கள் பின்னர் வெளியாகவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த உதாசீன போக்கு, அவர் தற்போது விருப்பமான இடமாக ஐக்கிய அரபு இராச்சியத்தை தெரிவுசெய்தமைக்கும், இந்த வர்த்தகங்களுக்கும், தொடர்புகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.