யாழில் மணல் திருட்டை தட்டிக்கேட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோப்பாய் வடக்கை சேர்ந்த 34, 47 வயதுடைய இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மறவன்புலவிலுள்ள தனியார் காணியொன்றில் நீண்டகாலமாக மணல் திருட்டு இடம்பெற்று வந்த நிலையில், காணி உரிமையாளருக்கு தெரியாமல், இரவில் அங்கு நுழையும் திருடர்கள், டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மணல் திருடர்களை மடக்கிப் பிடிக்க நினைத்த காணி உரிமையாளரும், இன்னொருவரும் நேற்றிரவு தமது காணிக்கு சென்றபோதே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,
நேற்றிரவு எமது காணிக்கு சென்றோம். அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினோம். யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. மணல் ஏற்றி முடிந்த பின்னர்,எம்மை தாக்கினார்கள். மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் மறவன்புலவை சேர்ந்தவருக்குரியது என்றும் , அதை தம்மால் அடையாளம் காட்ட முடியும் எனவும் அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.