வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் ; அறிக்கை கோரும் ஆளுநர்
வெல்லம்பிட்டி வெஹெரகொட கனிஷ்ட பாடசாலையில் குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்ட கொங்கிரீட் மதில் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை
இது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.. ஒரு வாரத்துக்குள் உரிய அறிக்கை கிடைத்த பின்னர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
அதேவேளை அந்த அனர்த்தத்தில் காயமடைந்த மற்றுமொரு மாணவர் கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த 5 மாணவர்கள் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.