வெலிகம தவிசாளர் படுகொலை ; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், துப்பாக்கிதாரியின் மனைவி உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவின் அதிகாரிகளால் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து மற்றும் வசதிகளை வழங்கிய மேலும் மூன்று சந்தேக நபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர தனது காரியாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் இதுவரை பொலிஸ் காவலில் உள்ளனர்.

இவர்களில், துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் தலைமறைவாக இருக்க உதவியவர் மற்றும் பொரளை சஹஸ்புரவில் உதவிய இருவர் என 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, 72 மணிநேர தடுப்புக்காவலில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கெக்கிராவை வீட்டிலிருந்து தப்பிச் சென்ற தான், பேரூந்தில் கொழும்புக்கு வந்து, பின்னர் பொரளை சஹஸ்புர பகுதிக்குச் சென்றதாக துப்பாக்கிதாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் இரண்டு நபர்களைச் சந்தித்து, அவர்களின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு, தன்னிடம் இருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, அதில் ஒரு பிரச்சினை இருப்பதால் வைத்திருக்கச் சொல்லியுள்ளார்.
மற்றைய சிறிய தொலைபேசியை மின்னேற்றம் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு, அவர்கள் அறிந்த இடத்திற்குச் சென்று, தனது தலைமுடி மற்றும் தாடியை வெட்டி, தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொண்டதாகவும் துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.
சந்தேக நபரின் வாக்குமூலங்களின்படி, வெலிகம பிரதேச சபை தவிசாளரின் படுகொலை 20 இலட்சம் ரூபா ஒப்பந்தத்திற்கு மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதற்காக துப்பாக்கிதாரிக்கு 15 இலட்சம் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளின் போதும் துப்பாக்கிதாரி இதனை வெளிப்படுத்தியுள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலமுறை பணம் கேட்டபோதிலும், அவருக்கு பணத்திற்கு பதிலாக போதைப்பொருள் வழங்கப்பட்டதாகவும் துப்பாக்கிதாரி வெளிப்படுத்தியுள்ளார்.

வெலிகம பிரதேச சபை தவிசாளரை படுகொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ரஜித சம்பத் அல்லது 'டுபாய் லொக்கா' என்பவரே வழங்கியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, 'டுபாய் லொக்கா', 'மிதிகம சூட்டி' மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் துப்பாக்கிதாரியுடன் தொலைபேசியில் பேசி தவிசாளரை படுகொலை செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவர்கள், படுகொலையைச் செய்வதற்கு 02 மோட்டார் சைக்கிள்களையும் வழங்கியுள்ளதுடன், அவற்றில் ஒரு மோட்டார் சைக்கிள் தற்போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், படுகொலைக்குப் பின்னர் துப்பாக்கிதாரி உள்ளிட்ட குழுவினருக்கு கெக்கிராவையில் தங்குமிடம் வழங்கிய நபர், அப்பகுதியில் 'வடை' வியாபாரி என அழைக்கப்படுபவர் எனவும், அவருக்கு போதைப்பொருள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி வருவதற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் தலா 30,000 ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபை தவிசாளர், மக்கள் தினமன்று பிரதேச சபைக்கு வந்துள்ளதாக 'டுபாய் லொக்கா' துப்பாக்கிதாரிக்கு வழங்கிய தகவலுக்கமைய, அவர் (துப்பாக்கிதாரி) பிரதேச சபைக்கு வந்துள்ளார். சந்தேக நபர் தற்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்தக் கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இவர்களுடன், கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காலி, அகுலுகஹ பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பாவனைக்கு உகந்த வகையில் திருத்திக் கொடுத்த வலன பகுதியைச் சேர்ந்த வாகன திருத்துமிட உரிமையாளர் மற்றும் அந்த மோட்டார் சைக்கிளை கொலையாளிகளிடம் கொண்டு வந்து கொடுத்த பொல்அத்துமோதர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆகியோரும் வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட இந்த மூன்று சந்தேக நபர்களும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பொலிஸ் அதிகாரி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வாகன திருத்துமிட உரிமையாளர் மோட்டார் சைக்கிளின் 'ஸ்டார்ட்டர் மோட்டரை' பொருத்துவதற்காக 400 ரூபா கட்டணம் பெற்றதாகவும், அது பாதுகாப்பு கெமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
எனவே, தமது சேவை பெறுநர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை அல்லது குற்றத்திற்கு உதவவில்லை எனவும் அந்த சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மாத்தறை பிரதம நீதவான் சத்துர திசாநாயக்க, மேலதிக விசாரணை அறிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்கள் மூவரையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்படி, குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று பிற்பகல் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.