கொழும்பில் களைகட்டும் பொங்கல் வியாபாரம் ; மக்கள் வருகை அதிகரிப்பு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு இம்முறையும் கொழும்பு, கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை, செட்டியார் தெரு மற்றும் வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் பொங்கல் வர்த்தகம் மிகவும் களைகட்டியுள்ளது.
பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காகத் தமிழர்கள் அதிகளவிலான பொருட்களைக் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, பொங்கல் பானை, பூஜைப் பொருட்கள், தின்பண்டங்கள் மற்றும் பொங்கல் அலங்காரப் பொருட்களான கரும்பு, மாவிலை தோரணம், தென்னம் தோரணம் போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்குப் பிற்பாடு, இந்த பொங்கல் வியாபாரமானது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாக இங்குள்ள வியாபாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் புறக்கோட்டை பகுதியில் பொங்கல் வர்த்தகம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். ஆனாலும், இம்முறை மக்களின் வணிக நடவடிக்கைகள் சிறியளவில் குறைவடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த பொங்கல் வியாபாரமானது இன்றைய நாள் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.




