நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எம்மிடம் உள்ளது!
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எம்மிடம் இருக்கின்றது. பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) எம்மிடம் கேட்டால் நாங்கள் ஆலோசனை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். சர்வதேசத்துடன் கலந்துரையாடி அரச கடன்களை மீள் கட்டமைப்பு செய்யலாம்.
ஆனால் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக இந்த அரசாங்கத்துக்கு சர்வதேசத்துடன் சிறந்த உறவு இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் கடன் தவணைகளை மீள் கட்டமைத்துக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேசத்துடன் கலந்துரையாடவேண்டும். அதன் மூலமே கொஞ்சமேனும் மூச்சு விடமுடியுமாகின்றது. வருடத்துக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது.
எவ்வாறு இந்த கடனை செலுத்துவது. அதற்கான அரசாங்கத்தின் திட்டம் என்ன? இந்த வருடம் நாட்டு வளங்களை விற்பனை செய்து அந்த கடனை அடைக்கலாம், அடுத்த வருடம் எதை விற்பனை செய்வது?. அத்துடன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது என கேட்கின்றனர். எம்மிடம் அதற்கான வேலைத்திட்டம் இருக்கின்றது.
சர்வதேசத்துடன் கலந்துரையாடி எமது கடன்களை மீள் கட்டமைத்துக்கொள்ளவேண்டும் என்றே நாங்கம் அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றோம். எமக்கு சர்வதேசத்துடன் கலந்துரையாடி இதனை செய்ய முடியும். நாங்கள் சர்வதேச நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வருகின்றோம்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதத்துக்குள் எங்களுக்கு மீண்டும் ஜி.எஸ்.பி சலுகையை வழங்கினார்கள். ஜனநாயகத்தை மதிக்கின்ற, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற அரசாங்கம் என சர்வதேசம் எம்மீது நம்பிக்கை கொண்டிருந்தது.
ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படுகின்ற, மனித உரிமையை பாதுகாக்க தவறுகின்ற, சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மறுக்கின்ற அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிப்பதில்லை. அதனை விளங்கிக்கொள்ளவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) சென்ற வழியிலேயே கோத்தாபய ராஜபக்ஷவும் செல்கின்றார். மனித உரிமை மீறல் தொடர்பாக 2013, 14,15 என தொடர்ந்து மூன்று வருடங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எமக்கு எதிரான தீர்மானம் நிறைவேணற்றினார்கள். 2015இல் பொருளாதார தடை விதிக்கப்படும் நிலையே இருந்தது.
அதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ அவசரப்பட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றார். அந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றதால் பொருளாதார தடை விதிக்கப்படவில்லை.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷவும் (Gotabaya Rajapaksa) அதேவழியில்தான் செல்கின்றார். அதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் எமக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கும் என தெரியாது.
ஐராேப்பிய ஒன்றியம் எமக்கு ஜ,எஸ்.பி சலுகையை வழங்குவது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் சர்வதேசத்துடன் எமது கட்சிக்கு நல்ல உறவு இருக்கின்றது. எமக்கு அவர்களுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதனால் சர்வதேசத்துடன் கலந்துரையாடி எமது கடன் தவணையை மீள் கட்டமைப்பு செய்துகொள்ளவேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் நாட்டை முன்னுக்குகொண்டு செல்ல முடியும். அத்துடன் அரசாங்கம் அனைத்தையும் கொரோனாவின் மீது சுமத்தி தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றது.
கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் எமது நாட்டை சுற்றி இருக்கும் எந்த நாட்டிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசை இல்லை. அதேபோன்று அந்த நாடுகளின் அந்நிய செலாவணி கொரோனா காலத்தில் அதிகரித்திருக்கின்றது.
எமது நாட்டில் மாத்திரம் வருமானம் குறைவடைந்திருக்கின்றது.இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும்
அத்துடன் இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு எந்த பக்கத்திலாவது நிவாரணம் இருக்கின்றதா என கேட்கின்றேன். மக்களுக்கு நிவாரணம் எதுவும் இல்லை. அதேபோன்று நாட்டில் விலை கட்டுப்பாடு என்று ஒன்று இல்லை.
எனது பாராளுமன்ற வரலாற்றில் எந்த அரசாங்க காலத்திலும் விலை கட்டுப்பாட்டை நீக்கியதாக இல்லை. பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது அரசாங்கத்தின் இயலாமையே காட்டுகின்றது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது இருக்கும் ஒரேவழி சர்வதேசத்துடன் கலந்துரையாடுவதாகும்.
அதற்கு அரசாங்கம் சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேண வேண்டும். எமக்கு சர்வதேசத்துடன் சிறந்த உறவு இருக்கின்றது.
சர்வதேசத்துடன் கலந்துரையாடுவதற்கு அரசியல் முதிர்ச்சி மிக்க தலைவர்கள் எங்களுடன் இருக்கின்றனர். அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியும் என்றார்.