போலி முகப்புத்தக கணக்குகளை வைத்திருப்போரின் கவனத்திற்கு ; நாடாளுமன்றில் வெளியான தகவல்
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகப்பு புத்தக கணக்குகளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பதிவேற்றம் செய்யும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் பதிவுகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஒருசில பகுதிகளில் கைதுகளும் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சைபர் குற்றப்பிரிவு விசாரணை
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம் சமூகத்தினரை மாத்திரம் இலக்காக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக எவ்வித முறைப்பாடுகளும் மற்றும் தகவல்களும் கிடைக்கவில்லை.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகப்பு புத்தக கணக்குகளை தயாரித்து அதனூடாக வெறுப்பு பேச்சுக்களை பதிவேற்றம் செய்யும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான பதிவுகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஒருசில பகுதிகளில் கைதுகளும் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இனநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறான நிலை ஏற்படாது என்றார்.