டெல்டா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை!
கொவிட் தொற்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் பாரிய நிலைமை எதிர்வரும் இரு மாதங்களில் அனுபவிக்க நேரிடலாம் என வைரஸ் தொடர்பான உலக முன்னணி பேராசிரியரான மலிக் பீரிஸ் எச்சரித்துள்ளார்.
தேசிய விஞ்ஞான அறக்கட்டளை நிகழ்வொன்றில் நேற்று இணையவழியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. எதிர்வரும் சில வாரங்களில் அது இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.
பொது சுகாதார நிபுணராக நான் இவ்வாறு எச்சரிக்கை விடுக்காவிட்டால், நான் எனது பொறுப்பை தட்டிக்கழித்ததாக ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை மிகவும் வேகமாக மேற்கொள்வதையிட்டு நான் அரசாங்கத்துக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.