இலங்கை மக்களுக்கு தங்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கையில் தங்கத்தை மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி பொதுமக்கள் தங்க ஆபரணங்களை இழக்க வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் போலி இரத்தினக் கற்களைக் காட்டி மக்களை ஏமாற்றிவரும் மோசடி கும்பலொன்று , அதற்குப் பதிலாக தங்கத்தை பரிமாறிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முத்து கொடுத்து தங்கம் பறிக்கும் மோசடி
இந்த மோசடி தொடர்பில் மூவர் அடங்கிய குழுவின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெட்டியகொட – நிந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலும் இருவருடன் இணைந்து போலி இரத்தினக் கற்களை வழங்கி அதற்கு பதிலாக பெறுமதியான தங்கப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக காலி மற்றும் களுத்துறை பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் ஏனைய 2 சந்தேகநபர்கள் இருவரையும் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.