வெளிநாட்டவருக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டினுள் முச்சக்கர வண்டிகளை செலுத்துவது அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அண்மைக் காலங்களில் வெளிநாட்டினர் செலுத்தும் முச்சக்கர வண்டிகளால் உயிரிழப்பு மற்றும் கடுமையான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமையை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
சரியான பயிற்சியும் இல்லை
வெளிநாட்டினரிடம் முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு அதற்கான சரியான பயிற்சியும் இல்லை. இந்த சூழ்நிலையைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு நடவடிக்கையாக, செல்லுபடியாகும் உரிய சாரதி அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டவர் முச்சக்கர வண்டியை செலுத்தினால், வாகனத்தின் உரிமையாளரை அழைத்து, வாக்குமூலம் பதிவு செய்து, நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்களை வழங்கும் போது குறிப்பாக முச்சக்கர வண்டிகளை நாட்டினுள் செலுத்துவதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கும் போது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கிறார்களா? என்பதை முறையாகச் சரிபார்த்து, வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.