வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (25) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை(27) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் புதிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரி திட்டம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் மலையக அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தின் சிறந்த விடயங்களை வரவேற்றுள்ள நிலையில் ஒருசில விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.