முதலமைச்சராக பதவி ஏற்றதும் இரு முக்கிய கோப்புகளில் கையெழுத்திடவுள்ள விஜய் !
நாளை (மே 7) தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தவெக தரப்பில் அமைச்சரவை பட்டியல் குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே, தவெக சார்பில் வெற்றி பெற்ற 72 உறுப்பினர்கள் மாமல்லபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல்
ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில், முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
அமைச்சரவையில் செங்கோட்டையன், ஜேசிடி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், மரிய வில்சன், ராஜ்மோகன், அருண்ராஜ், சத்தியபாமா, விஜயலட்சுமி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்பு விழா குறித்து தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
இதில், உள்துறைச் செயலர் மணிவாசன், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முதல்வராக நாளை பதவியேற்கும் விஜய், மக்கள் நலன் சார்ந்த 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘‘தகுதியுள்ள வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். அதேபோல, நகரப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய வாக்குறுதியை விஜய் அளித்திருந்தார்.
பதவியேற்றதும், இந்த இரு முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் விஜய் முதல் கையெழுத்திடுவார் என்று தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையில் மாறிமாறி அமர்ந்த நிலையில், இம்முறை இவ்விரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு தனிப்பெரும் கட்சியாக விஜயின் தவெக வரலாறு படைத்துள்ளது.