விஜய்யின் ஜனநாயகன் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவல் ; ரசிகர்கள் பதற்றம்
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்', இணையதள கசிவு (Leak) காரணமாகப் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சென்சார் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கடந்த ஜனவரி மாதம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

தற்போது மே மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சியும் மேலும் பல காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் கசிந்த காட்சிகளில், விஜய்யின் அறிமுகக் காட்சியும், அவரது கையில் 'TVK' எனப் பச்சை குத்தப்பட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
படத்தில் அவரது கதாபாத்திரம் 'தளபதி வெற்றிகொண்டான்' என அழைக்கப்பட்டாலும், அது அவரது அரசியல் கட்சியின் பெயரைக் குறிப்பதாகவே இரசிகர்கள் கருதுகின்றனர்.
மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு படம் எப்படி இணையத்தில் கசிந்தது என்பது குறித்து திரையுலகினர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பிரபல விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.