நாடாளுமன்றத்தில் தலதா அத்துக்கோரள மீது வசைபாடல்; கவலை வெளியிட்ட சபாநாயகர்
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற் விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள வாய்மொழி மூல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனே இன்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இடம்பெற்றது. இதன் போது, சில அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துகோரள மீது வாய்மொழி மூல பாலியல் வசைபாடுகளை நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோகிணி கவிரத்ன கவலை தெரிவித்தார்.
இந்நிலையில்,அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த சபாநாயகர், மேற்படி செயற்பாடானது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறுவதாகவுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்ச்சிப்பதற்கும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கும் இது இடமல்ல. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர் களே உள்ளனர். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவமானத்திற்கு உட்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.