ஏழு ஆண்டு இழுபறியின் பின் திறக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்தியநிலையம்
வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் புதன்கிழமை (03) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்று அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்ப்பட்ட இழுபறிகளுக்கு மத்தியில் மதவுவைத்தகுளத்தில் அது அமைக்கப்பட்டது.
ஏழு ஆண்டு இழுபறி
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபாய் செலவில் விசேட பொருளாதார மத்தியநிலையம் அமைக்கப்பட்டது.
எனினும் அமைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் பல்வேறு காரணங்களால் அது இயங்க முடியாத சூழல் ஏற்ப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றையதினம் மக்கள் பாவனைக்காக அது கையளிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இக் கட்டிடத்தில் 50கடைகள் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 35 கடைகள் வவுனியா மொத்தவியாபாரசந்தை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கடை சதோச நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிப அமைச்சர் வசந்தசமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர்களான எம்.ஜெயவர்த்தன, உபாலிசமரசிங்க, மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன் ஆகியோரால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.