பொலிஸாருடன் முறுகல்; வவுனிய நகர சபை உறுப்பினர் அதிரடியாக கைது!
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று (18) ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, வவுனியா நகரசபை உறுப்பினர் எம்.எஸ். அப்துல் பாரி உள்ளிட்ட இருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலிஸார், தமக்கான புதிய வரிசையை உருவாக்கி, எரிபொருளை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் தங்களுக்கான எரிபொருளை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியுமென தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதன்போது பொலிஸாரிடம் தட்டிக்கேட்ட நகரபை உறுப்பினர் பாரி மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், இரு பொலிஸாருக்கு இரு அரச ஊழியர்கள் என்ற ரீதியில் எரிபொருளை வழங்க பொலிஸார் உடன்பட்டதன் பின்னரே, குறித்த குழப்ப நிலை முடிவுக்கு வந்திருந்தது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் போது பொலிஸார் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை பெற்றுச்செல்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தங்களுக்கான எரிபொருளை பெறுவதற்கு பல நாட்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.