மன்னார் பொது வைத்தியசாலை சூழலில் சுகாதார சீர்கேடுகள்
மன்னார் பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது வைத்தியசாலையின் கீழ் குத்தகை அடிப்படையில் இயங்கும் சிற்றூண்டி சாலையில் தொடர்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மன்னார் நகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் தலைமையில் வைத்தியசாலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக மனித கழிவுகள் சிற்றுண்டிசாலை வளாகத்தில் காணப்பட்டமை,கழிவு நீர்,மலக்கழிவுகள் திறந்த பகுதியில் விடப்பட்டமை, அதிகளவான இலையான்கள், துர்நாற்றம், ஒழுங்கற்ற கழிவுகற்றல், நுளம்பு பெருக்கத்துக்கு சாதகமான சூழல், கழிவு நீர் வாய்கால்களில் புழுக்கள், உணவு பொருட்கள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை,அழுக்கான சமையலறை,கழிப்பறை தொட்டிகள் மூடப்படாமை உள்ளடங்களாக பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டன.
இவ்வாறான நிலையில் குறித்த சிற்றுண்டிசாலைக்கு எதிராக வழக்கு தாக்கள் செய்யப்படவுள்ளதுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக நகரசபை சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.



