தனியார் பேருந்தில் பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளை
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்தை நானுஓயாவில் நிறுத்திய போது பேருந்தின் பின் பகுதியில் வைத்திருந்த சில பயணிகளின் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு நானுஓயா கிளாரண்டன் பகுதியில் இறங்கியுள்ளனர்.
ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை
பேருந்தின் பின்பக்க கதவை மூடாமல் சென்றதையறிந்து பேருந்தை நானுஓயா டெஸ்போட் பகுதியில் வீதி ஓரமாக நிறுத்திச் சாரதி, நடத்துநர், மற்றும் பயணிகள் இறங்கிப் பார்த்த போதே பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த நானுஓயா பொலிஸார் பயணிகளிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.