வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
நம் வாழ்க்கையில் வாழை மரத்தில் இருந்து கிடைக்கு அனைத்துமே, உடல் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக் கூடியது. வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத் தண்டு என அனைத்தும் ஊட்டசத்துக்களின் களஞ்சியம்.
வாழைமரத்தின் நடுத்தண்டு பகுதியான வாழைத்தண்டு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த அற்புத காய்கறி ஆகும் இதை சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்போம்.
சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும்
சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு அருமருந்து. டையூரிக் பண்புகள் கொண்ட வாழைத்தண்டு, சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு, பக்கவாதம் மாரடைப்பு போன்ற ஆபத்துக்கள் தடுக்கப்படும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்
வாழைத்தண்டில் விட்டமின் பி6 மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை இரண்டுமே இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. வைட்டமின் பி6 குறைபாட்டால் மனச்சோர்வு, பார்க்கின்சன் நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இதனை தடுக்கவும் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
செரிமான மண்டலத்தை பாதுகாக்கும்
உடலில் நச்சுக்கள் சேரும் போது தான், ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. உடலில் கழிவுகள் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வதால், பல நோய்களை தவிர்க்கலாம். இதற்கு வாழைத்தண்டு பெரிதும் கை கொடுக்கும். வாழைத்தண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அதோடு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.