குடிகார கணவர்களால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்த பெண்கள்!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களின் துன்புறுத்தல்களால் அவர்களுடைய மனைவிகள் கோவிலில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில், சிவன் கோவில் ஒன்று உள்ளது. கவிதா மற்றும் குஞ்சா என்ற பப்லு ஆகிய 2 பெண்கள் இந்த கோவிலுக்கு வந்தனர்.
மாலை மாற்றி திருமணம்
அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) மாலை, ஒருவருக்கொருவர் மாலை மாற்றியபடி திருமணம் செய்துகொண்டனர்.
இதில், குஞ்சா மணமகன் போல் கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்ததுடன், இருவரும் மாலை போட்டு சடங்குகளை செய்து, திருமணம் செய்து கொண்டனர். திருமணம் பற்றி குஞ்சா கூறுகையில்,
நாங்கள் இருவரும் முதன்முதலாக இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொண்டோம். எங்களுடைய இருவரின் கணவர்களும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள். குடித்து விட்டு போதையில் வந்து தகராறில் ஈடுபடுவார்கள்.
இந்த தகவலை நாங்கள் பரிமாறி கொண்டோம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்” என்றார்.
கணவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளான நாங்கள், அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு செய்தோம். ஒரு தம்பதியாக கோரக்பூரில் வசிக்க போகிறோம். நாங்கள் இருவரும் குடும்பம் நடத்துவதற்காக வேலைக்கு செல்வோம் எனவும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.