கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா எச்சரிகை!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போரில், ஈரானின் மிக முக்கியமான எரிசக்தி மையமான கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், எந்தநேரத்திலும் கார்க் தீவை "முற்றிலுமாக அழிக்க" அமெரிக்க இராணுவத்தால் முடியும் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார்.
கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது முற்றுகையிடுவது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானின் நிலப்பரப்பில் இருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு வழியாகவே ஈரானின் மொத்த மசகு எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90வீதம் நடைபெறுகிறது.
கார்க் தீவு அழிக்கப்பட்டால் ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
கடந்த வார இறுதியில் இந்தத் தீவு மீது அமெரிக்கா சில தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், எண்ணெய் ஏற்றுமதி வழக்கம் போல் நடப்பதாகவும், உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முடக்கி வைத்தால், கார்க் தீவின் எண்ணெய் கட்டமைப்புகளை இலக்கு வைப்போம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20வீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது.
இந்தப் பாதையை ஈரான் மூடியுள்ளதால், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த மிரட்டல், ஏற்கனவே முடங்கியுள்ள சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலியில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.