அமெரிக்காவால் இலங்கைக்கு அழுத்தம்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டின் இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கின்றது என்றும், எந்தவொரு மனிதநேயத் தேவையின் போதும் பொருத்தமான முறையில் தலையிட அரசாங்கம் தயார் என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடற்பரப்பிற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே, இன்று (4) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

19 ஈரானியக் கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகக் கப்பல் போக்குவரத்து சிக்கலாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கையைத் தவிர மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்புகளிலும் இவ்வாறு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அவை அண்மையில் வந்தவை அல்ல என்றும், நீண்டகாலமாகவே குறித்த சர்வதேசக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அந்தக் கப்பல்களில் 19 ஈரானியக் கப்பல்கள் அடங்குகின்ற போதிலும், அவை இலங்கையின் கடற்பரப்பிற்குள் நிறுத்தப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், குறித்த கப்பல்களுக்கு உணவு அல்லது நீரை வழங்குவதைத் தடுக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான எந்தவொரு அழுத்தமோ, தலையீடோ அல்லது அறிவிப்போ அமெரிக்காவினால் விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எமது இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே நாங்கள் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கின்றோம்.
எனினும், மனிதநேயக் காரணங்களால் எமக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில், தேவையான தலையீட்டை நாங்களும் செய்வோம். அத்துடன் 'IRIS Bushehr' கப்பல் இன்னமும் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அதிலுள்ள 13 கடற்படையினருக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கி அந்தக் கப்பலைப் பாதுகாப்பாகப் பராமரிக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அமெரிக்காவினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதையோ அல்லது விநியோகங்களை வழங்குவதையோ இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என தெளிவுபடுத்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இலங்கை எப்போதும் சர்வதேசக் கடல்சார் சட்டத்திற்கு அமையவே செயற்படுவதாகத் தெரிவித்தார்.
இலங்கை அமைந்துள்ள புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சொந்தமான பெருமளவிலான கப்பல்கள் தினமும் தீவிற்கு அருகில் பயணிப்பதால், ஒரு நாடாக இலங்கை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அக்கப்பல்களுக்கு ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.