அமெரிக்க - இந்திய அதிகாரிகளின் இலங்கை விஜயம்: பின்னணியில் இப்படியொரு திட்டமா?
அமெரிக்க - இந்திய அதிகாரிகளின் தொடர்ச்சியான இலங்கை விஜயத்தின் பின்னணியில் திருகோணமலையில் இரு நாடுகளும் இணைந்து கூட்டு இராணுவத் தளம் ஒன்று உருவாக்கப்படுவதற்கான நகர்வுகள் காணப்படுவதாக தெரிவிக்கபடுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
அமெரிக்க - இந்திய கூட்டு இராணுவத் தளம் ஒன்று திருகோணமலையில் உருவாக்கப்படுவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அமெரிக்க - இந்திய இராஜதந்திர மட்ட அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வருவதற்கான காரணம் அதுவாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மூலோபாய திட்டத்திற்கான நோக்கங்களை அடைய ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ அரசாங்கம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க 13வது அரசியல் சட்டத் திருத்ததை விரைவில் செயல்படுத்த எத்தனிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.
இந்த விஜயத்திற்கு முன்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன், பிராந்தியத்திற்கான மூலோபாயத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
“அமெரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் நலன்களைப் பாதுகாப்பதிலும் சீன அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்கொள்வதிலும் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் திருகோணமலையில் அமெரிக்க - இந்திய கூட்டு இராணுவத் தளத்தை நிறுவுமாறு தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு நுலண்ட் பரிந்துரைத்தார்” என சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்படுள்ளது.
அதேபோல் இந்திய - அமெரிக்காவின் மூலோபாயத் திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்கான முக்கிய அம்சமாக இருக்கும் என்பதால், 13வது திருத்தத்தை விரைவில் செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்தனர்.
13வது அரசியல் சட்டத் திருத்தம் இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் அதே வேளையில் மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்டுகின்றது.
இவ்வாறு இராணுவ தளத்தை நிறுவுவது, "பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும், மேலும் அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்" என இந்திய இராஜதந்திர மட்ட அதிகாரியொருவர் ஒருவன் செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.