அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளியான அவசர எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனமழை, அடர்ந்த மேகமூட்டம் மற்றும் மூடுபனி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் முன்னால் செல்லும் வாகனங்களைப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எச்சரிக்கைகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காகப் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு பயணித்தல். காலநிலைக்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தேவையேற்படின் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தல்.
முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையில் போதுமான இடைவெளியைப் பேணுதல். அதிவேக நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கைகளை அவதானித்துப் பின்பற்றுதல்.
மழைக்காலங்களில் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், அதிவேகமாகச் செல்லும் போது திடீரென பிரேக் (Sudden Braking) போடுவதைத் தவிர்க்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரித்துள்ளது.
இது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதற்கும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புரளுவதற்கும் வழிவகுக்கும் என்பதால், வானிலை சீராகும் வரை நிதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.