நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை ; மூவர் பலி
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
சீரற்ற வானிலை
அநுராதபுரத்தின் தம்புத்தேகம பகுதியில் நேற்று (19) பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அதேநேரம் பேராதனை பகுதியில் மண் மேடு சரிந்ததில் மண்ணில் புதையுண்ட நிலையில் 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் ஆற்றின் அருகே நடந்து சென்றபோது அருகிலுள்ள மண் மேடு அவர் மீது சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதேவேளை, ருவன்வெல்ல - மாகம்மன பகுதியில், கனமழையின் போது குற்றி ஒன்றை பயன்படுத்தி கால்வாயைக் கடக்க முற்பட்ட ஒருவர் கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 54 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, 03 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால் 101 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.