தேவேந்திரமுனை இளைஞர்கள் படுகொலை தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்காக சிறப்பு பொலிஸ் குழுக்கள் பலவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
மூன்று நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டிற்காக வேன் வாகனத்தில் வந்து, அவர்களில் இருவர் இறங்கி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பின்னர் தெரியவந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் நண்பர் ஒருவர் துப்பாக்கிதாரிகளுக்கு தகவல் வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள கிளை வீதியில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வேன் வாகனம் தொடர்பாகவும், பொலிஸார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வேன் வாகனம் ஒரு பிரபல தொலைபேசி சேவை நிறுவனத்தின் ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் மேலும் சில இளைஞர்களும் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்த இடத்தின் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த இதைப் போன்ற வேன் ஒன்றை காட்டும் வீடியோக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அந்த வேன் வாகனம் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், கொல்லப்பட்ட இளைஞர்களின் நெருங்கிய நண்பன் எனவும், வேன் வாகனத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்த பிரபல தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
அந்த வேன் வாகனம் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், கொலைக்கு ஒப்பந்தம் எடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் 30 வயது மனைவியாவார். அவர் கொலைக்கு உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியதாகக் கூறப்படும் தெஹிகெதர பாலே என்பவரின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 46 வயதுடைய வியாபாரியாவார்.
நான்காவது சந்தேக நபர், துப்பாக்கிதாரிகளுக்கு தங்குமிடம் வழங்கியதற்காக கபுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், பாலே மல்லி என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையிலிருந்து இயக்கும் நபர் என குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தங்காலை மற்றும் மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.