யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்தை வழிமறித்ததால் அமைதியின்மை!
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான அரச பேருந்து வழமை போன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை இன்று காலை ஏற்றி வந்தது.
அமைதியின்மை
இதன்போது அரச பேருந்தை ஏ-35 வீதியின் பரந்தன் சந்திப்பகுதில் வைத்து தனியார் போக்குவரத்து சங்க நிர்வாகத்தினர் வழி மறித்துள்ளனர்.
இதனால், அமைதியின்மை ஏற்பட்டதுடன் கடமைக்கு சென்ற அரச உத்தியோகத்தர்களும் நீண்ட நேரமாக தடுத்து நிறுத்தப்பட்டனர் .
இதையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
அத்துடன், குறித்த பேருந்து சேவை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எந்தவித முறைப்பாடுகளும் செய்யாது இவ்வாறு பேருந்துகளை வழி மறைப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்து இரண்டு பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.